வெள்ளி, 21 மார்ச், 2014

என்னுயிர் தோழி .சிறுகதை


thoziஅம்மா, மதிய உணவுக்கு அப்பா வரும் போது பக்குவமாய் எடுத்துச் சொல்லி கேட்டுப் பார்க்கிறேன்னு சொன்னீங்களே, கேட்டீங்களா? அப்பா சரின்னு சொல்லிட்டாரா?” பள்ளி விட்டு வந்ததும் புத்தகப் பையை மேஜை மீது வைத்து விட்டு தாய் புனிதவதியிடம் ஆர்வத்தோடு கேட்டாள் ஜனனி.

“”நீ கேட்டதை அப்பாவிடம் சொன்னேன். அதைக் காதில் வாங்காத மாதிரி இருந்துட்டாரு. பதில் ஏதும் சொல்லலை” தாய் புனிதவதி சொல்ல, காற்றை இழந்த பலூனைப் போல முகம் சுருங்கினாள் ஜனனி.
“”நான் என்னம்மா நகையோ, பணமோவா கேட்டேன்.  இதுக்குப் போய் உங்களிடம் இப்படிக் கெஞ்ச வேண்டி இருக்கே” சற்றுக் குரலை உயர்த்தி ஜனனி பேச,
“”இங்க பார் ஜனனி, பெரிதோ சிறிதோ எதுவாய் இருந்தாலும் நீயே உங்கப்பாக்கிட்ட கேட்டுக்கோ” நறுக்கெனச் சொல்லிவிட்டு காலியான தேநீர்க் குவளையைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார் புனிதவதி.
அம்மாவின் பதில் ஏமாற்றத்தைத் தர, கலங்கிய கண்களோடு அறைக்குள் சென்று கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டாள் ஜனனி.
பூஞ்சோலை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் ஜனனி. அவளது வகுப்புத் தோழி அறிவுமதி. நன்றாகப் படிப்பவள். அவளிடம் ஜனனி மிகுந்த அன்போடு பழகினாள். இருவரும் பள்ளியில் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்.
பூஞ்சோலை கிராமத்தில் ஜனனியின் வீட்டுக்கு “கம்பத்தம்’ வீடு என்றுதான் பெயர். அந்தப் பகுதியிலேயே செல்வாக்கு மிகுந்த செல்வந்தர் ஜனனியின் தந்தை.
ஊரின் முகப்புச் சாலையை ஒட்டி பள்ளி இருந்ததால் பள்ளிக்கு ஜனனியை காரில்தான் அழைத்துச் செல்வார்கள்.
அறிவுமதியின் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. ஜனனியுடனான நட்பு பள்ளி வரை மட்டுமே. தோழி என்ற முறையில் இதுவரை ஒருநாள் கூட ஜனனியின் வீட்டுக்குச் சென்றதில்லை அறிவுமதி.
அறிவுமதிக்கு நாளைக்குப் பிறந்தநாள். தனது வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில்தான் அறிவுமதியின் வீடு என்பதால் நாளை அவளைத் தன்னுடன் காரில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், பிறந்தநாளுக்கு அவள் சார்பில், வகுப்பில் படிப்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் என்றும் விரும்பினாள் ஜனனி. இது மிகச் சாதாரண விஷயம்தான். எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் ஜனனி நினைத்தாள். ஆனால், இது விஷயத்தில் பெற்றோர் காட்டும் அக்கறையின்மையை நினைத்து எரிச்சலடைந்தாள் ஜனனி. அதை நினைத்த போது கோபம் வந்தது. ஆற்றாமையில் மனம் வெதும்பினாள்.
சமையல் அறையில் வேலைகளை முடித்துவிட்டு வந்த புனிதவதி மகள் ஜனனியைத் தேடினாள். கட்டிலில் குப்புறக் கிடந்த ஜனனியைப் பார்த்ததும்,
“”இது என்ன கெட்டப் பழக்கம் ஜனனி. விளக்கு ஏற்றும் வேளையிலா தூங்குவது? எழுந்து வந்து படி. வீட்டுப் பாடங்களை முடித்து விட்டாயா?” என்று விசாரித்தபடி அருகில் வந்து ஜனனியின் முதுகைத் தட்டினார்.
தாயின் கையைத் தள்ளி விட்டபடி, “வெடுக்’கென எழுந்து அமர்ந்தாள். முகம் இறுக்கமாய் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன. ஜனனி அப்படி இருப்பதற்கான காரணம் புரிய வர, “”எழுந்திரு ஜனனி. இதற்கெல்லாமா கோவிச்சுக்குவாங்க?” என்றார் மென்மையாக.
“”நீங்களே சொல்லுங்கம்மா, நான் தினந்தோறுமா அவளை நமது காரில் அழைத்துப் போக வேண்டுமென்று சொல்கிறேன். நாளைக்கு ஒரு நாள், அதுவும் அவளுடைய பிறந்தநாள். அவளுக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைத் தருவதற்காகத்தானே கேட்டேன். பள்ளிக்குக் காரில் சென்று இறங்கும் போது அவளுக்கும் பெருமையாய் இருக்கும். மனதில் மகிழ்ச்சி அலை பரவும். இதைச் செய்ய நினைத்தது தவறா?” தாயின் முகம் பார்த்துக் கேட்டாள் ஜனனி.
“”நீ நினைக்கிறதுல தப்பு இல்லை ஜனனி. ஆனா அதற்கும் மேல் நாங்க சிந்திப்பதற்கு அதில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு.”
“”என்னோட ஒரு சாதாரண விருப்பத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள உங்களிடம் இவ்வளவு போராட வேண்டியிருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல” முகத்தை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டு சொன்னாள் ஜனனி.
“”அதான் சொன்னேனே, உனக்கு சாதாரணமாய்த் தெரியும் ஒரு விஷயம் எங்களுக்குச் சிக்கலானதா தெரியுது. இப்ப என்ன, உன்னோட வகுப்புத் தோழிக்குப் பிறந்தநாள், அதானே. இப்பவே அப்பாவிடம் தொலைபேசியில் பேசி ஒரு அழகான பரிசுப் பொருளை வாங்கி வரச் சொல்றேன். நாளைக்குப் பள்ளி சென்றதும், அதை அவளிடம் உனது பரிசா கொடுத்திடு. சந்தோஷம்தானே” நல்ல தீர்வு என நினைத்து தனது மகளிடம் சொன்னார் புனிதவதி.
அந்த யோசனைக்கு உடன்படாதவளாய் அங்கிருந்து வேகமாய் எழுந்துச் சென்றாள். தனது புத்தகப் பையை எடுத்து வைத்துக் கொண்டு அன்றைய பாடங்களைப் படிக்கத் தொடங்கினாள் ஜனனி.
இரவு எட்டு மணிக்கும் மேலாகிவிட்டது. “”ஜனனி வந்து சாப்பிடு.” தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அமர்ந்திருந்த தனது மகளை இரவு உணவுக்காக அழைத்தார் புனிதவதி.
“”எனக்குப் பசிக்கல. சாப்பாடும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்.” முகத்தில் கடுமையோடும், மனதில் சுமையோடும் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
இனி அவளைச் சாப்பிட வைக்க முயற்சிப்பது வீண் வேலை. ஜனனி பொதுவாக எதையும் கேட்டு அடம்பிடிக்க மாட்டாள். எதையும் அன்போடு பக்குவமாய் எடுத்துச் சொன்னாள் ஏற்றுக் கொள்வாள்.
ஆனால், ஒரு சில விஷயங்களில் இப்படித்தான் உடும்புப் பிடியாய் நின்று விடுவாள். அந்த நிலையில் அவளை வழிக்குக் கொண்டு வருவதென்பது மிகவும் கஷ்டமான விஷயம். இப்போது என்ன செய்யலாம்? இப்படியே விட்டால் நாளை பள்ளிக்கே போகாமல் கூட விட்டு விடுவாள்.
சிந்தனை நெருக்குதலைக் கொடுக்க, தொலைபேசியை எடுத்து தனது கணவரிடம் நிலைமையைச் சொன்னார். “”சரி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே.” மறுமுனையிலிருந்து கணவர் சொல்ல, மனத் தெம்போடு தொலைபேசியை வைத்தார் புனிதவதி.
மறுநாள் காலை, வழக்கமாய் எழுந்திருப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே எழுந்து பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள் ஜனனி.
கையில் தேநீர்க் குவளையோடு தாயும், கையில் செய்தித்தாளோடு தந்தையும் ஜனனியின் அருகில் வந்து அமர்ந்தனர்.
“”என்ன ஜனனி, சீக்கிரமே எழுந்திட்டே போலிருக்கு, இந்தா தேநீர். ஆறிப் போயிடும் சீக்கிரம் குடி” அன்போடு புனிதவதி சொல்லி, “”எனக்கு வேண்டாம்” எனச் சுருக்கமாய் பேச்சை முடித்துக் கொண்டாள் ஜனனி.
பள்ளி செல்வதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு புத்தகப் பையுடன் வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி. வழக்கமாய்த் தன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நிற்கும் காரைக் காணோம்!
திகைப்போடு ஜனனி நின்று கொண்டிருக்க, ஓட்டுநர் மணி செர்ரிப் பழ நிறத்தில் ஒரு புதிய மிதிவண்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, ஏதும் சொல்லாமலே போனவர், அடுத்த சில நிமிடங்களில் அதே நிறத்தில் இன்னொரு புதிய மிதிவண்டியைக் கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தினார். புத்தம் புதிய இரண்டு மிதிவண்டிகளைப் பார்த்ததும் ஆச்சரியமாய் இருந்தது ஜனனிக்கு.
விவரம் ஏதும் புரியாமல் திரும்பிப் பார்த்தாள். அங்கே முகத்தில் புன்னகையோடு தந்தையும், தாயும் நின்று கொண்டிருந்தனர்.
“”ஜனனி, இந்த இரண்டு மிதிவண்டிகளில் ஒன்று உனக்கு. இன்னொன்று உனது தோழி அறிவுமதிக்கு நீ கொடுக்கப் போகும் பிறந்தநாள் பரிசு. இனி, நீங்கள் ரெண்டு பேரும் மிதிவண்டியிலேயே பள்ளிக்குச் செல்லலாம்” தந்தை சொல்ல,எந்த ஒரு பிரச்னையையும் நிதானத்தோடு அணுகி சரியாகச் சிந்தித்து, பொருத்தமான முடிவு எடுப்பதில் வல்லவர் எனப் பெயரெடுத்த தனது தந்தையின் முகத்தை பெருமையோடு நோக்கினாள் ஜனனி. அந்தப் பார்வையில் அன்பு கலந்த நன்றி தெரிந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக