வெள்ளி, 21 மார்ச், 2014

அண்ணி நீங்க ரொம்ப அழகு.சிறுகதை

சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்.. சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் செல்போனில் அழைப்பு வர.. எடுத்து “”ஹலோ..” என்றேன்.
“”மாலா அக்கா நான் தான் கார்த்திக் பேசறேன்”
“”என்ன கார்த்திக்? 2 வருஷமாச்சு உன் குரல கேட்டு.. எங்கேதான் போயிட்டீங்க? கார்குழலி எப்படி இருக்கா? குழந்தை பாவனா எப்படி இருக்கா?”
“”அக்கா!”– எதிர்முனையில் குரல் தேய்ந்து.. கரைந்தது.

“”சொல்லு கார்த்திக்! என்ன தயக்கம்?”
“”அக்கா.. கார்குழலியை அடையார் கேன்சர் இன்ஸ்ட்யூட்ல சேத்திருக்கேன். இன்றைக்கு மதியம் 12 மணிக்கு அவளுக்கு ஆபரேஷன்.”
“”என்னத்துக்கு…?”– என் குரலில் பதற்றம்.
“”அவளுக்கு பிரெஸ்ட் கேன்சர்”.
“”என்ன?”– என் குரலில் இப்போது அதிர்ச்சியும் சேர்ந்துகொண்டது.
“”அவளுக்கு 2 வருஷமாவே பிரச்னைதான். மருந்து, மாத்திரை, ஊசி, கதிர்வீச்சு சிகிச்சைனு எதிலும் சரிப்படாம இப்போ ஆபரேஷன்தான் முடிவாயிடிச்சு. நாங்க சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு. எல்.பி. ரோட்டில் இருக்கிற லாட்ஜில் தங்கியிருக்கோம். 2 நாளைக்கு முன்னதான் ஆபரேஷனுக்கு டேட் கிடைச்சுது.”
“”மொதல்ல லாட்ஜை காலி பண்ணிட்டு இங்கே வந்துடு கார்த்திக். பாவனா எங்கே?”
“”அவ எங்க அம்மாவோட மும்பையில இருக்கா. இப்ப அவளுக்கு பரீட்சை நேரம்.”
“”ஒரு வாரம் ஆச்சுங்கறே.. எங்களுக்கு ஒரு தகவலும் தெரிவிக்கலையே. இது நியாயமா?”–என் குரலில் கடுங்கோபம்.
“”அக்கா.. அவ பிடிவாதம்தான் உங்களுக்கே தெரியுமே..! தனக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமை உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு அவ நினைக்கிறா.. நான் தான் மனசு கேட்காம ஆவறது ஆவட்டும்னு சொல்லிட்டேன். அங்கிளுக்கு சொல்லிடுங்க.”
“”சரி.. சரி.. நான் சொல்லிக்கறேன்..நீ ஆஸ்பிட்டல்ல அவள கவனிச்சுக்க. நாங்க சாயந்திரம் வந்து பார்க்கிறோம்.”
அடுத்த நொடியில் சுதாகருக்குப் போன் பண்ணினேன்.
விஷயத்தைச் சொன்னேன். தனது ஒரே தங்கைக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவதாக கூறினார்.
கேரட்டைக் கழுவ சமையலறைக் குழாயைத் திறந்தேன். தண்ணீர் சல சலவென கேரட்டுகளைக் குளிப்பாட்டிவிட்டு சிங்க் வழியாக பைப்பில் வெளியேறிக் கொண்டிருந்தது.
என் நினைவுகளும் மெல்ல மெல்ல பின்னோக்கிச் சென்றன.
* * * * *
6 ஆண்டுகளுக்கு முன்..
சென்னை மாநிலக் கல்லூரியில் நானும் சுதாகரும் எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்தோம். ஒரே வகுப்பு. இருவர் மனமும் ஒன்றாகி காதலாக கனிந்தது.
அன்று கல்லூரி முடிந்தவுடன் ஹீரோ ஹோண்டாவை தள்ளியவாறே வந்த சுதாகர், “”வண்டியில் ஏறு,” என்றார்.
“”எங்கே?”
“”குயின் மேரிக்கு..”
“”எதற்கு?”
“”அங்கே பிஎஸ்சி படிக்கிற என் தங்கை கார்குழலியை உனக்கு அறிமுகப்படுத்தப் போறேன்..”–என்றார்.
சுதாகர் வற்புறுத்தலை மீற முடியவில்லை.
கல்லூரியிலிருந்து ஒரு பெண் நேராக சுதாகரை நோக்கி வந்தாள்.
“”வா.. கார்குழலி.. மீட் மை உட்பி.. அதாவது உன் வருங்கால அண்ணியை..” என்றார் சுதாகர் உற்சாகமாக.
ஓ இவள்தான் கார்குழலியா? பெயருக்கேற்ப நீண்ட கூந்தல் அவளுக்கு. சடை பின்னியிருந்தாள்.
“”அண்ணா.. உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா.. திடுதிடுப்புனு இவங்கள எனக்கு அறிமுகப்படுவீங்க?”
“”இதுமட்டுமல்ல. இன்னும் ஃபியூ டேஸ்ல அம்மா கிட்டே அறிமுகப்படுத்தப் போறேன்..”
–சுதாகரின் குரலில் இருந்த உறுதியைக் கண்டு கார்குழலி அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.
இருப்பினும் இறுக்கமான சூழ்நிலையைத் தவிர்க்க கார்குழலியைப் பார்த்து இதமாக புன்னகைத்தேன். பதிலுக்கு அவளிடம் அத்தகைய புன்னகையை எதிர்பார்க்க முடியவில்லை.
மாறாக என் தலைமுடியை ஏற இறங்க பார்த்தாள். அதில் ஓர் ஏளனம் தெரிந்தது. காரணம்? எனக்கு கார்குழலியைப் போல் அடர்த்தியான, கருண்ட, நீண்ட கூந்தல் கிடையாது.
இருவரும் எனக்கு பை..பை.. சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பினர்.
அன்று..
சுதாகர் நான் தங்கியுள்ள லேடீஸ் ஹாஸ்டலுக்கு வெளியே இருந்து செல்லில் அழைப்பு விடுத்தார்.
என்னை அழைத்துக் கொண்டு நேரே அவங்க வீட்டுக்குச் சென்றார்.
கார்குழலிக்கு என்னைப் பார்த்ததும் “மைல்டு ஷாக்’.
பின்னர் சமாளித்துக்கொண்டு “ஹாய்..’ என்றாள் உலர்ந்த உதடுகளுடன்.
உள்ளே நுழைந்தோம். சுதாகர் கை காட்ட.. உள்ளே சோபாவில் அமர்ந்தேன்.
“”இதோ வந்துடறேன்..”
–எதிர்ப்புற அறைக்கு சுதாகர் நுழைந்தார்.
அப்போது பக்கவாட்டு அறையில் இருந்து கார்குழலியின் கரகரத்த குரல். “”மம்மி.. உன் புள்ள பண்ணியிருக்கிற காரியத்தைப் பார்த்தியா..? வந்திருக்கிறது அவனோட உட்பியாம். உனக்கு அறிமுகப்படுத்த அழைச்சிட்டு வந்திருக்கான்.. காதலுக்கு கண்ணில்லைங்கிறதை உன் புள்ள நிரூபிச்சுட்டான். அவள வந்து பார். அவளும் அவ தலைமுடியும். இந்த வயசுல உனக்கு இருக்கற தலைமுடியின் நீளம், அடர்த்தில பாதிகூட அவளுக்கு கிடையாது. வந்து பார். அவ லட்சணத்தை..,”
–உள்ளே இருந்து நன்றாக கேட்கும்படியாக வந்து விழுந்த அந்த வார்த்தைகள் என்னைக் கூனிக் குறுகச் செய்தன.
இருப்பினும் நிராதரவான எனக்கு சுதாகர்தானே பேராதரவு. சமாதானப் படுத்தினார். இந்நிலையில் ஒருவழியாக திருமணம் நடந்தேறியது.
* * * * *
அன்று மாலை.
அலுவலகத்திலிருந்து வந்த சுதாகர் கையில் பூச்சரங்கள் அடங்கிய பொட்டலம்.
என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தவாறே பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பத்து முழம் மல்லி. அடர்த்தியாக கட்டப்பட்டு அழகாக இருந்தது. அதன் வாசம் அறை முழுக்கப் பரவி சுவாசத்துக்கு இனிமை கூட்டியது.
நான் அந்தப் பூச்சரத்தை சுதாகரிடம் இருந்து பெற்றுக்கொள்ள நெருங்கியபோது.. எங்கிருந்தோ வந்த பருந்து கோழிக்குஞ்சை கொத்திச் செல்வது போல கார்குழலி விருட்டென வந்தாள்.
அடுத்த நொடி அவள் கையில் மல்லிச் சரம்.
“”அண்ணா மல்லி சரம் சூப்பர். ஆனா குருவித் தலையில பனங்காய் வச்சா தாங்குமா? அதனால அண்ணிக்கு அரை முழமே போதுமே..,” என்றவாறே அரை முழம் பூவை பல்லினாலேயே கட் செய்து மீதி ஒன்பதரை முழத்துடன் உள்ளே மறைந்தாள்.
சுதாகர் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். நான் இயல்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
“”போகட்டும் விடுங்க.. கார்குழலி சொல்றதுல தப்பில்லை. அவ கூந்தலுக்கு இந்த பத்து முழம்கூட பத்தாது. எனக்கு இந்த அரை முழமே நிறைவாத்தான் இருக்கும்..”
எனது பேச்சு சுதாகருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும். “”யூ ஆர் கிரேட்” என்று சொல்லியவாறே என்னை ஆழமாகப் பார்த்தார்.
திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போகும்வரை கார்குழலி, தன் வார்த்தைகளால் என்னைக் குத்திக் குடைந்து குரூர குதூகலம் அடைந்தாள்.
இதற்கிடையே அடுத்த 6 மாதத்தில் எனக்கு கண்ணன் பிறந்தான். குழந்தையைப் பார்க்க மும்பையில் இருந்து கார்குழலி தனது கணவர் கார்த்திக்குடன் வந்தாள். குழந்தையைப் பார்த்து பூரிக்க வேண்டிய கார்குழலியின் முகம் இறுக்கமாகியது.
மறுகணம் போலி புன்னகையோடு, “”அண்ணி.. இது உங்களுக்குப் பிறந்த குழந்தையான்னு நம்பவே முடியலை. தலைநிறைய கரு கருன்னு முடியோடு இருக்கே. ம்.ஹூம் அண்ணனுக்கு அடர்த்தியான தலைமுடியாச்சே. அதான் குழந்தை தப்பிச்சுடுச்சு. இல்லைன்னா மொட்டைத் தலையாத்தான் பொறந்திருக்கும்..” என்றாள் கேலியும் குத்தலுமாக.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
உலகிற்கு ஒரு புது வரவு. கார்குழலிக்கு பெண் மகவு.
சுதாகருடன் நர்சிங்ஹோம் சென்றேன்.
கார்குழலியைப் பார்த்தும் திடுக்கிட்டேன்.
நிறைய அழுதிருப்பாள் போல. தண்ணீரில் முக்கிய பன் போல முகம் உப்பியிருந்தது.
அவளருகே தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் கண்டேன். 3 கிலோவுக்கு மேல் இருக்கும். நல்ல சிவப்பு. ஆனால் மண்டையில் நாலு முடி கூட இல்லாமல் மொட்டையாக இருந்தது.
ஓ கார்குழலி இதனால்தான் அழுதிருப்பாள் போலிருக்கிறது.
“”என்னம்மா? பிள்ளைப் பெத்த உடம்பு. இப்படி விசனப்பட்டுக் கிடக்கலாமா? சில குழந்தைகள் இப்படித்தான் பொறக்கும்..வளர வளர தலைமுடியும் வளர்ந்துடும்.”
-எனது மாமியார் அவளருகே அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதன்பின் இரண்டு வருடங்கள் சென்றிருக்கும்.
அன்று எங்களுக்கு ஓர் அதிர்ச்சி.
இழப்பு..பேரிழப்பு.
மாரடைப்பால் எனது மாமியார் காலமானார்.
மும்பையில் இருந்து பிளைட் பிடித்து பறந்துவந்தாள் கார்குழலி. “அம்மா’ என்று பெருங்குரலெடுத்து சவம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீஸர் பாக்ஸ் மீது விழுந்து கதறினாள்.
உடன் அவளது கணவர் கார்த்திக். குழந்தை சினேகா என்னவென்று புரியாமல் மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
6 மாதக் குழந்தையாக சென்ற சினேகாவை இப்போது இரண்டரை வயதில் பார்க்கிறேன். அப்போது அங்கு வந்தான் என் குழந்தை கண்ணன்.
“”வர்றியா..விளையாடலாம்..,” என்றான் சிநேகாவைப் பார்த்து. நீண்ட நாள் பழக்கம்போல சிநேகா அவனுடன் விளையாடச் சென்றாள்.
சவ ஊர்வலம் புறப்பட்டதும் வீட்டிலிருந்த பெண்கள், குழந்தைகள் தலைமுழுக ஆரம்பித்தோம். அப்போதுதான் வெறும் ஜட்டியுடன் நின்றிருந்த சிநேகாவை பார்த்தேன். அவள் தலை மொட்டை அடித்தது போல இருந்தது. என்னவென்று கார்குழலியைக் கேட்டேன்.
“”என்ன எழவோ! அந்த சனியனுக்கு தலைமுடியே சரியா வளரலே,” என்றாள் சலிப்புடன்.
“”ட்ரீட்மெண்ட் எடுத்தியா?”
“”எல்லாம் ஆயிரம் ஆயிரமா கொட்டி அழுதாச்சு,” என்றாள் மேலும் வெறுப்புடன்.
நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
துக்கத்தின் சுமையிலும் 16 நாள்கள் ஊர்ந்து தேய்ந்தன. அன்று மும்பைக்குத் திரும்ப தயாராகிக் கொண்டிருந்தாள் கார்குழலி.
வெளியே குழந்தைகளின் கசமுசா சப்தம்.
“”மொட்டை மொட்டை.. சிநேகா மொட்டை..”
“”இல்ல நீந்தான். இல்ல நீந்தான்..”
“”இல்லியே நீதான் மொட்டை..”
கண்ணனின் சீண்டலுக்கு சிநேகா சிணுங்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்து கண்ணன் கை கொட்டிச் சிரித்தான். கார்குழலிக்கு வந்ததே ஆத்திரம்.
குழந்தை என்றும் பாராமல் கண்ணனின் முதுகில் ஓங்கி அறைந்தாள். அடிபட்ட கண்ணன் அழுதபடி என் மடியில் வந்து விழுந்தான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுதாகர் பொறுமை இழந்தார்.
“”என்ன கார்குழலி..கண்ணன் ஒரு குழந்தைன்னு உனக்குத் தோணலையா?”
“”ஓ…இப்ப உனக்கு உன் குழந்தைதான் முக்கியமாப் போச்சு.. அம்மாவும் போயிட்டா..இனி எனக்கு ஆதரவாப் பேச யாரு இருக்காங்கற தைரியம் வந்துடுச்சு..இனி எனக்கு இந்த வீட்டில என்ன வேலை? எல்லாம்தான் முடிஞ்சுப் போச்சே..,” சீறலும் அழுகையுமாக புலம்ப ஆரம்பித்தாள் கார்குழலி.
எங்கள் சமாதானமெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.
அப்படியே அன்று மும்பைக்குப் போனவள்தான். கடந்த 2 வருஷமா எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
இப்போது அடையாறு ஆஸ்பத்திரியில் கிடக்கறதா தகவல்.
13-ம் நம்பர் ஸ்பெஷல் வார்டு.
உள்ளே நுழைந்து விழிகளால் வலைவீசினோம். அங்கே ஓர் இடத்தில் கார்த்திக் நின்றுகொண்டிருந்தான். நேரே அங்கு சென்றோம்.
கட்டிலில் அது யார்..? கார்குழலியா? அடையாளம் தெரியவில்லை.
நல்ல நிறத்துடன் தள தளவென்றிருந்த கார்குழலி. நோய்க் கொடுமையால் தன்னிறமிழந்து வாடி வதங்கி இருந்தாள்.
கண்களை மூடி இருந்தாள்.
கார்குழலியின் தற்போதைய நிலைமையைப் பார்த்ததும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுரேந்தர் கைக்குட்டையை எடுத்தார். முகத்தைத் துடைத்துக்கொள்ளும் சாக்கில் தன் வேதனையை அடக்க முயன்றார்.
நான் கார்குழலி அருகே இருந்த ஸ்டூலில் அமர்ந்து அவள் நெற்றியில் விபூதி, குங்குமத்தை துளியூண்டு வைத்தேன். பிறகு அர்ச்சகர் கொடுத்த அம்மன் பூக்களில் ஒன்றை எடுத்து அவள் கூந்தலில் செருக நினைத்து தலையை மூடியிருந்த துணியை விலக்கினேன். அப்படியே அதிர்ச்சியில் பின்வாங்கினேன்.
அவள் தலை மழ மழவென வழுக்கை விழுந்தது போல் இருந்தது.
“”என்ன கார்த்திக் இது..? செஸ்ட்ல தான ஆபரேஷன்..தலையை ஏன் மொட்டை அடிச்சாங்க?”
“”இல்லக்கா கேன்சருக்கு கதிர்வீச்சு சிகிச்சை தரும்போது தலைமுடியெல்லாம் இப்படித்தான் கொட்டிடுமாம்..”
“”ஓ..!!”
–மேலும் அதிர்ச்சியில் மூழ்கினேன்.
இருவரும் கண்களைத் துடைத்துக் கொண்டு கலங்கி நின்றோம்.
“”என்ன இது? ஆறுதலும் தைரியமும் சொல்ல வந்த நீங்களே இப்படி மனம் உடைஞ்சுப் போனா..நான் என்ன பண்றது?”
கார்த்திக் குரலில் நியாயமான கோபம் வெளிப்பட்டது.
கார்குழலி கண் திறந்தாள். எங்கள் இருவரையும் பார்த்ததும் அவள் வேதனை அதிகரித்திருக்கக் கூடும். மீண்டும் கண்களை மூடினாள்.
மூடிய விழிகளுக்குள் இருந்து கண்ணீர்த் திவலைகள் கசிந்து வந்தன.
நான் ஆதரவாக அவள் கையைப் பிடித்துக்கொண்டேன்.
என் உள்ளங் கையில் அம்மன் மலர்கள் கசங்காமல் இருந்தன. அவள் தலையில் பூவை வைக்க முடியாத நிலைமை. என்ன செய்வது என்று தயங்கிக் கொண்டிருந்தபோது..கார்குழலியே மெதுவாக என் கையில் இருந்த பூவை எடுத்தவாறே பலம் அனைத்தையும் திரட்டி எழுந்துகொள்ள முயன்றாள்.
“”அண்ணி…”
பலவீனமான குரலில் கார்குழலி அழைத்தாள்.
“”என்னம்மா?”
“”நீங்க கொஞ்சம்.. திரும்பி உக்காருங்க..”
நான் என் முதுகுப்புறம் அவளுக்குத் தெரியும்படி திரும்பி உட்கார்ந்தேன்.
எனது மெலிந்த கூந்தலை அவள் தன் கையால் வருடினாள்.
அதன்மூலம் அவள் முதன்முதலாக தன் அன்பை வெளிக்காட்ட முயன்றாள். சிரமப்பட்டு அவள் அந்த ஒற்றை ரோஜாவை என் பின்னலில் செருகினாள்.
“”அண்ணி நீங்க இப்ப ரொம்ப அழகு..” என்றாள்.
என்னால் இப்போது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக