வெள்ளி, 21 மார்ச், 2014

கொடைக்கானல்




KDLPROCKஆண்டு முழுவதும் இங்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் அனைத்துத் தரப்பினரும் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக இருக்கிறது.
கோடை காலத்தை இனிமையாக்கிக் கொள்வதற்கு இங்கு ஆர்வமுடன் வரும் பயணிகள், கொடைக்கானலில் சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை பிரையண்ட் பூங்கா, வெள்ளி
நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக்,தொலைநோக்கி, பைன் பாரஸ்ட், அமைதிப் பள்ளத்தாக்கு, செண்பகனூர் மியூசியம் போன்றவையாகும்.
வெள்ளி நீர்வீழ்ச்சி: கொடைக்கானல் நகருக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை பன்னீர் தெளித்து வரவேற்பது போல இயற்கையாகவே அமைந்துள்ளது வெள்ளி நீர்வீழ்ச்சி. கொடைக்கானல் ஏரி மற்றும் பல இடங்களிலிருந்து மலைப் பாதை வழியாக வந்து 180அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும் இடம்தான் வெள்ளி நீர்வீழ்ச்சி. பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும்.
பிரையண்ட் பூங்கா: கொடைக்கானல் ஏரியின் கிழக்கு மூலையில் பச்சைக் கம்பளம் விரித்து வண்ண வண்ண மலர்களை ஆடையாக்கி வானுயர்ந்த மரங்களை காவலாக்கி பரந்து விரிந்து கிடக்கும் இடம்தான் பிரையண்ட் பூங்கா. இங்கு 800 வகையான ரோஜாச் செடிகள் உள்ளன. மேலும் வேறு எங்கும் பார்க்க முடியாத 80-வகையான மலர்ச் செடிகள் பூங்காவின் கண்ணாடி அறையில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் மலரும் 35-வகையான செடிகளும், ஆண்டு தோறும் பூக்கும் 50க்கும் மேற்பட்ட செடிகளும் இங்குள்ளன. கொடைக்கானல் நகரின் அழகுக்கு அழகு சேர்க்கும் இடமாக சுமார் 20ஏக்கர் பரப்பளவில் பிரையண்ட் பூங்கா விளங்குகிறது. பிரையண்ட் என்ற ஆங்கிலேயரின் தோட்டமே அவரது பெயரிலே பின்பு பிரையண்ட் பூங்காவாக மாறியது.
கோக்கர்ஸ் வாக்: கொடைக்கானல் ஏரிக்கு அருகே அமைந்துள்ள மற்றொரு இடம் கோக்கர்ஸ் வாக். 1870-ம் ஆண்டு கொடைக்கானல் வந்த ஆங்கிலேயப் பொறியாளர்  கோக்கர்ஸ், கொடைக்கானல் நகரின் அழகில் மயங்கி காலையும், மாலையும் நடந்து செல்வது வழக்கம். தான் நடந்து செல்வதற்காக மலையோரத்தில் ஒரு பாதையை உருவாக்கினார் கோக்கர்ஸ். அந்தப் பாதைதான் இன்று கோக்கர்ஸ் வாக் என்று அழைக்கப்படுகிறது. இவர்தான் கொடைக்கானல் நகரை வடிவமைக்க வரைபடம் தயாரித்துக் கொடுத்தவர். மலைப் பாதையில் நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் பசுமையாய் காட்சியளிக்கும். இங்கு தொலை நோக்கிக் கருவி ஒன்று உள்ளது. இதன் வழியாக தொலைதூரத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
பசுமை பள்ளத்தாக்கு: கொடைக்கானல் ஏரியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது பசுமைப் பள்ளத்தாக்கு. பெயருக்கு ஏற்றாற் போல எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படுத்துக் கிடக்கும் மலைச் சிகரங்களும் அவற்றை மூடிக் கிடக்கும் பச்சை மரங்களின் உச்சியில் தாவி விளையாடும் மேகக் கூட்டங்களும், கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு வீசும் காற்று நமது உடலை வருடிச் செல்லும்போது கிடைக்கும் சுகத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
கோடை ஏரி: 145 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆட்சியராக இருந்த சர்வரே ஹென்றி லெவிஞ்ச் என்பவர் இந்த ஏரியை உருவாக்கினார். 24 ஹெக்டேர் பரப்பளவில் நட்சத்திர வடிவில் உள்ள இந்த ஏரியைச் சுற்றித்தான் கொடைக்கானல் நகரமே அமைந்துள்ளது. இந்த ஏரியில்தான் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செய்து மகிழ்கின்றனர். ஏரியைச் சுற்றி குதிரைச் சவாரி, சைக்கிள் சவாரியும் உண்டு.
மழைக் காலங்களில் இங்கிருந்து செல்லும் சிற்றோடைகள் மலையடிவாரத்தில் உள்ள பழனி உட்பட பல இடங்களுக்கு குடிநீராக பயன்படுகிறது.
தூண்பாறை: கொடைக்கானலில் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது தூண்பாறை. வானத்தை தொடுவது போல பிளவுபட்ட இரு மலைகளுக்கு இடையே இந்தத் தூண்கள் அமைந்துள்ளன. மாலை நேரங்களில் பொன்னிறமாகக் காட்சியளிக்கும் தூண்பாறைகள் பார்ப்போருக்கு பரவசத்தை ஏற்படுத்தும். இந்தப் பாறைகளின் மீது வெண்
மேகங்கள் முத்த மழை பொழிவது போல் அவ்வப்போது கண்ணாமூச்சி காண்பித்துச் செல்கின்றன. அருகிலுள்ள ஓடையும், சில்லென்ற தென்றல் காற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்.
டால்ஃபின் நோஸ்: ஏரியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் ஒற்றையடிப் பாதையில் உள்ளது டாஃல்பின் நோஸ். சமதளப்பாறை ஒன்று டாஃல்பின் மீனின் மூக்கு போல் நீட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். இதுவே டால்பின் நோஸ் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
மோயர் பாயிண்ட்: ஏரியிலிருந்து பேரிஜம் பகுதிக்குச் செல்லும் வழியில் மோயர் பாயிண்ட் உள்ளது. இங்கிருந்துதான் கொடைக்கானல் நகரின் வரலாறு ஆரம்பமாகிறது. கொடைக்கானல் மலை உச்சிக்கு முதன் முதலாக 1929-ம் ஆண்டு இந்தப் பாதை வழியாகத்தான் தாமஸ் மோயர் என்ற வெள்ளையர் வந்தார். அவரது நினைவாக இந்தப் பகுதி மோயர் பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது.
செண்பகனூர் அருங்காட்சியகம்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வசித்து வந்த விலங்குகள், பறவைகள், அரியவகை உயிரினங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசிகள் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவை இங்கு பொக்கிஷமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது.
கொடைக்கானல் தனிமை விரும்பிகளுக்கும், குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம். இங்கு குறைந்த செலவில் பல்வேறு இயற்கை எழில் காட்சிகளையும், மலை உச்சியிலிருந்து விழும் அருவிகளையும் காணலாம். இங்கு வீசும் மூலிகைக் காற்றைச் சுவாசிப்பதும், சாரல் மழையை ரசிப்பதும் தனி சுகம்தான். தமிழ்நாட்டின் சிம்லா  கொடைக்கானல் என்று சொன்னால் அது மிகையாகாது.
அருகில் உள்ள விமானநிலையம் – மதுரை. ரயில்நிலையம் – கொடைரோடு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களிலிருந்து அடிக்கடி பஸ்வசதி உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக