வெள்ளி, 21 மார்ச், 2014

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நார்வே


Click Here

norway
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர், எந்த நாட்டை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும். அவர்களது குழப்பத்தைத் தீர்க்க வெளிநாடுகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த கட்டுரையில் நார்வே நாட்டின் அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்வோம்…

நார்வே வட ஐரோப்பியாவில் உள்ள நாடு. இது ஸ்காண்டிநேவியன் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.   இதன் கிழக்கில் ஸ்வீடனும், ரஷ்யாவும், மேற்கு மற்றும் தெற்கில் நார்வீஜியன் கடலும், வடகோடிப் பகுதியின் தெற்கே ஃபின்லாந்தும் அமைந்துள்ளன.
இங்கு 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு “சமி’ என்னும் பெயருடைய ஆதிவாசி இனத்தவர் வாழ்ந்திருந்தனர். நார்வே நாட்டின் தலை நகர் ஆஸ்லோ.
இது 385, 252 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பைக் கொண்ட நாடு. 48,50,440 பேர் இங்கே வசிக்கின்றார்கள். ஆட்சி மொழி “நார்வீஜியன் மொழி’. பயன்படுத்தப்படும்  நாணயம் “நார்வீஜியன் குரோன்’. கிறிஸ்தவ மதம்தான் முதன்மை மதமாக உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்கள் நூறு சதவிகிதம் உள்ள நாடுதான் நார்வே.
இங்கு அரசியல் அமைப்பு சட்ட முடியாட்சி முறை செயல்பட்டு வருகிறது.   மன்னராக “ஐந்தாம் எரால்டு’ அவர்களும், பிரதமராக “ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்’ அவர்களும் பதவி வகிக்கின்றனர்.
நாட்டின் மொத்தப் பரப்பில் ஐந்தில் மூன்று பங்கு இடத்தில் மலைகளையும், நான்கில் ஒரு பங்கு இடத்தில் காடுகளையும் கொண்ட நாடு இது. கடல் நீர் ஏரிகளும் இங்கு அதிகம் உள்ளன.
நார்வே, நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று சிறப்பிக்கப்படுகிறது. இது செளதி அரேபியா மற்றும் ரஷ்யாவிற்கும் அடுத்தபடியாக பாறை எண்ணெய் பெட்ரோலியம் (பெட்ரோலியத்தின் ஒரு வகை) உற்பத்தி செய்யும் நாடு ஆகும்.
“பெர்கென்’, “ஸ்டாவன்சர்’, “ஃபிரடெரிக்சாண்ட்’, “டிராமென்’, “கிரிஸ்டியன்சாண்ட்’ ஆகியன நார்வே நாட்டின் முக்கிய நகரங்களாகும். இந்த நாட்டின் புகழ் மிக்க “ராயல் பேலஸ்’, ஆஸ்லோ நகரில் உள்ளது. கிழக்கு நார்வேயில் உள்ள “ரோன்டேன் தேசியப் பூங்கா’வும், மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள “லோயென்’ என்னும் அழகிய கிராமமும் நார்வேயின் சிறப்பு மிக்க பகுதிகள் ஆகும். உப்பிடப்படாத உலர் மீனை (கருவாடு) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு நார்வே.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் நடந்தது. இந்தப் போரை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நடுவராக இருந்து பெரும் பங்காற்றிய நாடு நார்வே.
இங்கு கால்பந்து, டென்னிஸ் ஆகியவை முக்கிய விளையாட்டுகளாக உள்ளன. மேலும் ஸ்கேட்டிங், ஸ்கை ஜம்ப் ஆகிய பனிச்சறுக்கு விளையாட்டுகளில் நார்வே சிறப்பிடம் வகிக்கிறது.
பார்லி, ஓட்ஸ், ரை, உருளைக் கிழங்கு, பழங்கள் ஆகியன முக்கிய விளைபொருட்கள். இயற்கை வாயு, செம்பு, துத்தநாகம், நிலக்கரி, பெட்ரோலியம் ஆகிய இயற்கை வளங்கள் இங்கு காணப்படுகின்றன.
“ஸ்மோரிப்ரோடு’ (வெண்ணெய், ரொட்டி மற்றும் காய்கறிகளுடன் இறால், அல்லது மீன், அல்லது மாட்டு இறைச்சி சேர்த்து செய்யப்படும் உணவு), “ரெய்ன் டீர் ஸ்ட்ரீக்’ (வாத்து இறைச்சி,அல்லது செம்மறி ஆட்டு இறைச்சி, அல்லது பசுங்கன்று இறைச்சி, அல்லது மான் இறைச்சியை, காய்கறிகளும் தக்காளிச் சாறும் சேர்த்துச் சமைக்கும் உணவு), “காஃபி’, “பாலாடைக் கட்டி’, “ரை ரொட்டி’, “தக்காளி ஊறுகாய்’, “ஃபுரூட் சாலட்’, “சாக்கலேட்’ ஆகியவை நார்வே நாட்டு மக்களின் முக்கிய உணவுகளாகும்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவை முக்கியப் பண்டிகைகள். நார்வே குறும்பட விழாவும் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. மே 17 – ஆம் நாள், நார்வே நாட்டின் சுதந்திர தின நாளாகக் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக